பக்கங்கள்

வெள்ளி, 22 செப்டம்பர், 2017

அமெரிக்கா வாசிங்டன் - சிங்கப்பூரில் தந்தை பெரியார் பிறந்த நாள் கோலாகல விழா




வாசிங்டன், செப்.20 அமெரிக்கா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் தந்தை பெரியார் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கோலாகலமாக நடைபெற்றது.

பெரியார் பன்னாட்டு மய்யத்தின் சார்பில்,- வாசிங்டன் வட்டாரத்தில் 17.9.2017அன்று தந்தை பெரியாரின் 139 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது! தமிழகத்தில் இருந்து விழாவிற்கு வந்திருந்த கவிஞர் நந்தலாலா மிக அருமையாக, ‘‘பெரியார் இன்றும் தேவைப்படுகிறார்’’ என்ற தலைப்பில் பேசினார். - பெரியார், அண்ணா, காமராசர், எம்.ஆர்.ராதாபற்றி ஏராளமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்!

ஜெர்மனியில் சென்ற மாதம் நடைபெற்ற பன்னாட்டு மய்ய பெரியார் விழாப் பற்றி மருத்துவர் சோம.இளங்கோவன் பேசினார்!

நீட் ஏன் தமிழ் நாட்டிற்கு தேவை இல்லை, அது சமூக நீதிக்கு எதிரானது என்பதை முனைவர் சங்கர பாண்டி விளக்கினார்!

‘‘பெரியாரின் தனித்தன்மை, சமூக மாற்றம்’’பற்றி நியுசெர்சி வழக்குரைஞர் கனிமொழி -தனது எழுச்சிமிக்கப் பேச்சால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தார்! ‘‘பெரியாருக்கு நன்றி கடன்’’ என்ற தலைப்பில் முனைவர் ஜெயந்தி சங்கரபாண்டி பேசினார்! ‘‘பெரியாரின் அறிவும் மானமும்’’ என்ற தலைப்பில் பெங்களூர் குமரன் பேசினார்! 
‘‘சமத்துவம்’’ என்ற தலைப்பில் கிளாரா பீட்டர் பேசினார்! ‘‘பெரியாரின் வாழ்க்கை இணையர் அன்னை நாகம்மையார்’’பற்றி நல்ல சுவையான தகவல்களை பகிர்ந்து கொண்டார் மருத்துவர் சரோஜா இளங்கோவன்.

தந்தை பெரியார் சாதி ஒழிப்பு பற்றி பேசியதை, அப் படியே சிறப்பு நடிப்பாக நடித்து காண்பித்தார் மருத்துவர் சோம. இளங்கோவன்.

தோழர் சிவா பாபா சாகேப்பின் ஜாதி அழிக்கப்பட வேண்டும் கட்டுரையின் முக்கிய வார்த்தைகளைப் படித் தார். விழாவை தொகுத்து வழங்கினார் சுந்தர் குப்புசாமி. - இடை இடையே பெரியாரின் சிந்தனைகளை பகிர்ந்து கொண்டார்!  வருடா வருடம் நடக்கும் பெரியார் விழாவை இன்னும் சிறப்பாக,- எண்ணற்ற இளைஞர்களை உள் ளடக்கி மேலும் எப்படி இதனை நடத்தலாம் என்ற கலந்து ரையாடலை பேரவை முன்னாள் தலைவர் நாஞ்சில் பீட்டர் பகிர்ந்து கொண்டார்!

வாசிங்டன் தமிழ்ச் சங்கத் தலைவர் ராஜாராம் கலந்து கொண்டு - அடுத்த ஆண்டு சிறப்பு கூட்டத்திற்கும் அவரின் உதவி உண்டு என்று சொன்னார்! பெரியாரின் பிறந்த நாள் விழாவிற்கு வெர்ஜினியா, மேரிலாந்து, நியுசெர்சி, பென்சில் வேனியா மாநிலங்களில் இருந்து வந்த தமிழ் அன்பர்கள் கலந்துகொண்டார்கள்!

கலிபோர்னியாவில் பெரியார் விழா சிறப்பாக நடந்தது.  இன்னும் நியூஜெர்சி, சிகாகோ, கன்னெக்டிகட் போன்ற இடங்களில் நடக்க இருக்கின்றது.

நாள்: 23.7.2017, இடம்: சாம்பர்க்கு பொது நூலகம், 130, இரோசல் சாலை, சாம்பர்க்கு. 2 ஆவது மாடி கூட்ட அறை. நேரம்: பிற்பகல் 2 மணிமுதல் 4 மணிவரை.

சிங்கப்பூர்

செப்டம்பர் 17 அன்று சிங்கப்பூர் சையத் ஆல்வி சாலையில்  உள்ள ஆனந்தபவன் உணவகத்தின் இரண் டாவது தளத்தில் காலை 10 மணி முதல் 12.30 மணிவரை பெரியார்பிறந்த நாள் விழா மாணவர்கள் பங்குபெற்ற பட்டிமன்றமாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந் தினராக சிங்கப்பூர் கல்வி அமைச்சகத்தின் தமிழ்த்துறை உதவி இயக்குநர் த.வேணுகோபால் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் அனைவரையும் வரவேற்று அறிமுக உரையாற்றிய மன்றத்தின் செயலாளர் க.பூபாலன்; பெரியார் அவர்கள் வாழும்போதே அவருக்கு பிறந்த நாள் விழா கொண்டாட தொடங்கிவிட்டார்கள். தமிழகத்தில் மட்டு மல்லாமல் தமிழர்கள் வாழும் மற்ற நாடுகளிலும் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடி வருகிறார்கள். அந்தப் பெருமை தந்தை பெரியார் ஒருவருக்கு மட்டும்தான், மேலும் சிங்கப்பூரில் பெரியாரின் 62 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடி உள்ள செய்தி சிங்கப்பூர் தமிழ்முரசு பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது என்று கூறினார்.

‘‘பெரியார் விரும்பியபடி பெண்கள் ஆண்களுக்குச் சமமாக எல்லா வகையிலும் உயர்ந்திருக்கிறார்கள்! உயர வில்லை!’’ என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் மாணவர்கள் இருஅணியாக பிரிந்து சிறப்பாகப் பேசினார்கள். பெண்கள் கல்வி பெறவேண்டும், ஆண் பெண் சம உரிமை, விதவை மறுமணம், தாலி அடிமை சின்னம், கலப்பு மணம்  போன்ற பல பெண் உரிமைக்கான பெரியாரின் கருத்துகளை இரு அணியையும் சேர்ந்த 8 மாணவர்களும் தங்களின் விவாதத்தில் பேசினார்கள்.

சிறப்பு விருந்தினர் த.வேணுகோபால் அவர்கள் பேசும்போது மாணவர்களின் தமிழ் சொல்லாட்சியை பார்க்கும்போது இனிவரும் காலங்களில் சிங்கப்பூரில் தமிழ் செழித்தோங்கும் என்ற நம்பிக்கையுள்ளது. தந்தை பெரியார் அவர்களை அடிக்கடி நாம் நினைவில் கொள்ள வேண்டும். அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் சமூகஅநீதியை தட்டிக்கேட்டு தனி ஒரு மனிதராக ஒரு பெரிய போராளியாக உருவாகியவர். அவர் எழுப்பிய புரட்சிக் குரல் பலரையும் தட்டி எழுப்பி இருக்கிறது. அந்தக் காலத்தில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு வந்த அநீதியை எதிர்த்து போராடியவர் பெரியார். கல்வி எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் என்ற அவரின் சிந்தனை இன்று நிறைவேறி இருக்கிறது.   சுயமரியாதை இயக்கம் என்று பெரியார் தொடங்கக் காரணம் யாரும் உங்கள் உரிமையை நீங்கள் விரும்பாமல் தட்டிப் பறித்து விடமுடியாது. அதனால் சுயமரியாதை உணர்வு உங்களுக்கே வரவேண்டும். குறிப்பாக பெண் களுக்கு வரவேண்டும், உங்கள் உரிமையை நீங்களே நிலை நாட்ட வேண்டும் அதை ஆண்கள் தருவார்கள் என்று எப்போதுமே எதிர்ப்பார்க்காதீர்கள் என்று கூறினார்.

விழாவின் தலைமை உரையாற்றிய மன்றத்தின் தலைவர் வீ.கலைச்செல்வம் பேசும்போதுமானமும் அறி வும் மனிதனுக்குஅழகு என்ற பெரியாரின் பொன்மொழி எனக்கு பிடித்தமானது, அதன் பொருள் எவ்வளவு ஆழமானது என்பதைப்பற்றிப் பேசினார்.

மேலும் அமெரிக்காவில் அவர் 10 வருடங்களுக்கு மேலாக இருந்தபோது அவருக்குத் தமிழ்மொழி பழக்கத்தில் இருக்க தொடர்ந்து பேசி பயிற்சி எடுத்ததை நினைவு கூர்ந்தார்.   விழாவை பூபாலன் மன்ற உறுப்பி னர்களின் ஆதரவுடன் சிறப்பாக ஒருங்கிணைத்தார். இறுதியாக அனைவருக்கும்  சவுந்தர்ராஜ் நன்றி கூறினார்.

நிகழ்ச்சி மதிய விருந்துடன் நிறைவுற்றது. நிகழ்ச்சி சிங்கப்பூரின் ‘‘ஏ.எம்.பி.எம். ப்ராப்பர்ட்டி கன்சல்ட்டன்ஸ்’’   மற்றும் ‘‘சிறீ விநாயகா எக்ஸ்போர்ட்ஸ்’ நிறுவனத்தின் ஆதரவில் நடைபெற்றது. பட்டிமன்றத்தில் பெண்கள் ஆண்களுக்குச் சமமாக உயர்ந்திருக்கிறார்கள்! என்ற அணியில் விஷ்ணுவர்தினி, முத்துக்குமார், வானதி புகழேந்தி அனிருத், ஆகிய மாணவர்களும். இன்னும் உயரவில்லை! என்ற அணியில் யுவராஜ், ரிஷி பால கிருஷ்ணன், கிருஷ்ணன் சுமன் வேணுகோபால் ரோஷினி, ஆகிய மாணவர்களும் பேசினார்கள்.

பட்டிமன்றத்தை நடுவர் பிமல்ராம் சிறப்பாக நடத்தினார். சிறந்த பட்டிமன்ற பேச்சாளர்கள் மூன்று பேரை தேர்வு செய்து அறிவித்தார். அவர்களுக்கான பரிசுகள் நவம்பர் 12 ஆம் தேதி நடைபெறவுள்ள பெரியார் விழாவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பங்குபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை த. வேணுகோபால் அவர்கள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தமிழர் பேரவையின் தலைவர் பாண்டியன், வளர்த்தமிழ் இயக்கத்தின் பொருளாளர் ஜோதி.மாணிக்கவாசகம், ஆசியன் கவிஞர் க.து.மு.இக்பால், சிங்கப்பூர் தமிழர் இயக்கத்தின் செயலவை உறுப்பினர் ஓய்வுபெற்ற ஆசிரியை வே.தமிழ்மணி, தமிழ் பட்டிமன்றக் கழகத்தின் தலைவர் இரஜித், சிங்கப்பூர் தங்கமீன் பதிப்பகத்தின் ஆசிரியர் பாலு மணிமாறன், பெரியார் பெருந்தொண்டர்கள் ஆருர் சபாபதி, இராமசாமி, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சிங்கப்பூர் பிரிவின் தலைவர் கமலக்கண்ணன் மற்றும் பல அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

மன்றத்தின் புரவலர் புதுமைத்தேனி மா.அன்பழகன், மூத்த விரிவுரையாளர் ச.ரத்னக்குமார், எம்.இலியாஸ், பொருளாளர் நா.மாறன், இராஜராஜன், ராமன், திருமதி மலையரசி, திருமதி.தமிழ்ச்செல்வி, திருமதி. கவிதாமாறன், பழனி, சவுந்தர், திருமதி.கவுரி , திருமதி.பர்வீன்பானு, பெரியார் பிஞ்சு ஆதவன், இனியநிலா, கல்லூரி மாணவர்கள் குந்தவி, வளவன், ராஜராஜன் ராஜமகேந்திரன். தோழர்கள் செந்துறை மதியழகன், சேதுஜகதீசன், அறிவரசு. தமிழ்கரிகாலன், ஜகன்தங்கதுரை, நரசிம்மன், கார்த்திக் ராமசாமி, கதிராமங்கலம் கலியபெருமாள், கஸ்தூரிபாய் ஆகியோர் கலந்து கொண்டு விழா சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்தார்கள்.

-விடுதலை,20.9.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக