பக்கங்கள்

புதன், 18 ஏப்ரல், 2018

மனிதத்தின் நம்பிக்கை நாத்திகம்

மனிதத்தின் நம்பிக்கை நாத்திகம்
ஓங்கி முழங்கிய உலக நாத்திகர் மாநாடு
(5,6,7-01-2018)

-இனியன்

முதல் நாள் நிகழ்ச்சி



 

திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், விஜயவாடா நாத்திக மய்யம் இணைந்து நடத்திய உலக நாத்திகர் மாநாடு, திருச்சி கே.சாத்தனூர் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் என்.எஸ்.கே. அரங்கத்தில் 5.1.2018 அன்று காலை 9மணியளவில் உலக நாத்திகர் மாநாடு_2018 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் எழுச்சியுடன் தொடங்கியது.

இம்மாநாட்டுக்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் வரவேற்புரையாற்றினார். பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் (அமெரிக்கா) டாக்டர் இலக்குவன்தமிழ் தொடக்க உரையாற்றினார். ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடா நாத்திகர் மையத்தின் செயல் இயக்குநர் டாக்டர் கோ.விஜயம் மாநாட்டின் நோக்க உரையாற்றினார்.

புத்தகக் காட்சி திறப்பு:



 

இந்நிகழ்வில் பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் பன்னாட்டு மனிதநேய மற்றும் நன்னெறி ஒன்றியத்தின் (அய்.இ.எச்.யூ.) ஆலோசனைக்குழு இயக்குநர் எலிசபெத் ஓ’ கேசி புத்தகக் காட்சியைத் திறந்துவைத்தார்.

பகுத்தறிவாளர்களின் படத்திறப்பு:

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்துத்துவ வன்முறைகளுக்குப் பலியான, பகுத்தறிவு, நாத்திகக் கருத்துகளைத் துணிவுடன் பேசியும், எழுதியும் வந்த அறிஞர்களின் நினைவைப் போற்றும் வகையில் டாக்டர் நரேந்திர தபோல்கர், தோழர் கோவிந்த் பன்சாரே, பேராசிரியர் எம்.எம்.கல்புர்கி, பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் ஆகியோரின் படங்களை திராவிடர் கழகத் தலைவரும் பகுத்தறிவாளர் கழகப் புரவலருமான தமிழர் தலைவர் ஆசிரியர் கி.விரமணி அவர்கள் திறந்து வைத்தார்.

புத்தகங்கள் வெளியீடு:

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ஆங்கில நூலான Bhagavad
Gita Myth Or Mirage (பகவத் கீதை கற்பனை அல்லது புரட்டு) மற்றும் March of Atheism (நாத்திகத்தை நோக்கிய நடைப்பயணம்) ஆகிய நூல்களுடன், பேராசிரியர் சுரேந்தரா அஜ்நாத் எழுதிய Compilation of ‘Old Testament of Indian Atheism’- இந்திய நாத்திக தொன்மையான கருத்துகளின் தொகுப்பு எனும் ஆங்கில நூல், வரியியல் வல்லுநர் ச.ராசரத்தினம் எழுதிய, Essays of matters which matter (A Rationalist’s Perception) முக்கியத்துவம் மிக்கக் கட்டுரைக் கோவை (ஒரு பகுத்தறிவாளரின் பார்வையில்) ஆங்கில நூல், தந்தை பெரியார் 1928 மற்றும் 1929ஆம் ஆண்டுகளில் வெளியிட்ட ஆங்கில ஏடு ‘ரிவோல்ட்’ இதழ்களின் தொகுப்பு நூலாக Compilation of ‘Revolt’ - Published by Periyar in 1928 & 1929 ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.



பன்னாட்டு மனித நேயம் மற்றும் நன்னெறி ஒன்றியத்தின் லண்டன் தலைமைச் செயல் அலுவலர் கேரே மெக்கலாண்ட், மேனாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை மற்றும் தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.இராசா, மகாராட்டிரா அந்தராஷ்ரதா நிர்மூலன் சமிதி அமைப்பின் செயல் தலைவர் அவினாஷ் பாட்டில், பன்னாட்டு நாத்திகர் கூட்டமைப்பின் சார்பில் (அமெரிக்கா) ரஸ்டம் சிங், திராவிட இயக்க தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவன (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) இணைவேந்தர் ச.ராசரத்தினம் ஆகியோர் தொடக்க விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.

இம்மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேசுகையில்...

“உலகின் எந்த பகுதியிலும் காணமுடியாத மோசமான கொடுமையாக தீண்டாமை இந்தியாவில்தான் உள்ளது. அதற்குக் காரணம் ஜாதிமுறைதான். ஜாதிமுறை கடவுளின் பெயரால் புகுத்தப் பட்டது. இந்த நாடு நாத்திகத்துக்குரியது. கோயில்களுக்குரியதல்ல. நாத்திகம் என்பது மதத்தை மட்டுமே மறுப்பதல்ல. அதனுடன் தொடர்புடைய அனைத்து வகையிலான மூடநம்பிக்கைகளையும் எதிர்ப்பதாகும்’’ என்றார்.

பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் (அமெரிக்கா) டாக்டர் இலக்குவன்தமிழ் பேசுகையில்...

“இந்தியாவில் ஜாதியை தடை செய்ய வேண்டும். சமூகத்தில் வேதமுறைகள் நீடிக்கும் வரை முன்னேற முடியாது. சுயமரியாதை என்பது எல்லோரையும் ஒன்றிணைத்து பகுத்தறிவைச் சொல்லிக் கொடுப்பதாகும்’’ என்றார்.

மேனாள் மத்தியத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.இராசா பேசுகையில்,

“நாத்திகக் கருத்துகள்தான் திகார் சிறையில் இருந்தபோதும் என்னை மன உறுதியுடன் இருக்கச் செய்தது. பெரும்பாலான மக்களின் கல்விபெற முடியாத நிலைக்கு இந்து மதமும் அது புகுத்திய ஜாதி அமைப்புகளுமே காரணம்’’ என்றார்.

பேரா.சுப.வீரபாண்டியன் பேசுகையில்,

“நாத்திகம் என்பதற்கு அடிப்படை கடவுள் மறுப்புதான். கடவுள் மறுப்புதான் தன்னை மதிப்படையச் செய்யும். கடவுள் மறுப்புதான் ஜாதியை ஒழிக்கும். கடவுள் மறுப்புதான் மூடநம்பிக்கைகளை விரட்டும். நாத்திகம் என்பது எந்த ஆசைக்கும் பலியாகாது _ எந்த அச்சத்திற்கும் உள்ளாகாது. நாத்திகம் என்பது மக்களுக்காக வாழ்வது _ மக்களோடு வாழ்வது _ மக்களிடமிருந்து கற்பது _ மக்களுக்கே தருவது. சமூகம் சார்ந்த வாழ்க்கைதான் நாத்திகர் களுடையது. இல்லாத ஒன்றை கற்பிதம் செய்தல்ல _ இல்லாத ஒன்றுக்கு ஏங்குவதல்ல. வாழும்போதே நெறியுடன் வாழ்வதே நாத்திகம்’’ என்று கூறினார்.

பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வா.நேரு நன்றி கூறினார்.

முதல் அமர்வு:

திருச்சி_பெரியார் மருந்தியல் கல்லூரி அரங்கில் முதல் நாள் 5.1.2018 பிற்பகல் நடைபெற்ற முதல் அமர்வில் மூன்று ஆய்வாளர்கள் ‘மனித குலத்தின் முன்னேற்றத் திற்கானது நாத்திகம்’, ‘மத அடிப்படை வாதத்தின்அச்சுறுத்தல்கள், இன்னல்கள் அதற்கான தீர்வுகள் ‘மருந்தும் நாத்திகமும்’ என்னும் தலைப்புகளில் உரையாற்றினர்.

இரண்டாம் ஆய்வு அமர்வு:

அதே அரங்கில் தொடர்ந்த இரண்டாம் ஆய்வு அமர்வில், மதுரை அமெரிக்கன் கல்லூரி மேனாள் பேராசிரியர் சாம் ஜார்ஜ், ‘நாத்திகம் ஒரு வாழ்க்கை முறை’ எனும் தலைப்பிலும், மலேசிய மாந்தநேய திராவிடர் சங்கத்தினைச் சார்ந்த எம்.கோவிந்தசாமி ‘மலேசியாவில் திராவிடர் இயக்கம்’ என்னும் தலைப்பிலும் தமது ஆய்வு பற்றிய செய்திகளை வழங்கினர்.



இரண்டாம் நாள் நிகழ்ச்சி

உலக நாத்திகர் மாநாட்டின் இரண்டாம் நாளான 6.1.2018 அன்று தஞ்சாவூர்_வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உள்ள அய்ன்ஸ்டீன் அரங்கில் முற்பகல் சிறப்பு அமர்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழர் தலைவர் தலைமை தாங்கினார். பன்னாட்டு மனிதநேய நன்னெறி ஒன்றியத்தின் ஆலோசக இயக்குநர் எலிசபெத் ஓ’ கேசி சிறப்புரை வழங்கினார். பேராசிரியர் முனைவர் எஸ்.தேவதாஸ் வரவேற்புரையாற்றினார்.

ஒடிசா பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவர் தானேஸ்வர் சாகு ‘அறிவியலும் அறிவியல் மனப்பான்மையும் _ ஒரு கண்ணோட்டம்’ என்னும் தலைப்பிலும், கே.ராஜா கென்னடி, ‘சிறார்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல்’ எனும் தலைப்பிலும், முனைவர் இ.கி.ராமசாமி, ‘நாத்திக_மனிதநேய இயக்கப் போராளிகள்_ பெரியாரும், கோராவும்’ எனும் தலைப்பிலும், ஆய்வுக் கட்டுரைகள் படித்தனர். பகுத்தறிவாளர் சங்கத்தின் துணைத் தலைவர் வி.கவின்நிலா நன்றி கூறினார்.

6.1.2018 அன்று திருச்சி புத்தூர் பெரியார் மாளிகை வளாகத்தில் மாலை நிகழ்ச்சியாக சிறப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரை _ இணைப்புரை ஆற்றினார். அவர் தன் உரையில், பகுத்தறி வில்லாத மனிதன் மதக் காரியங்களுக்காக வாழ்நாளில் ஏராளமான அளவு காலத்தை வீணடிக்கிறான் என்பதை புள்ளி விவரத்துடன் எடுத்துக்காட்டினார்.

கவிஞர் கனிமொழி எம்.பி. பேசும்போது,

“உலகில் பல மதங்கள் இருக்கின்றன. அவை மனிதனைப் பிரிக்கின்றன. ஆனால், நாத்திகம் தான் மனிதர்களை இணைக்கிறது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தனது ஆசான் _ குரு என்று சொல்லலாம். உலக யுத்தங்களைவிட மனித ரத்தம் சிந்தப்பட்டது மதங்களால்தான். மதச் சண்டைகளால்தானே!

நாம் இத்தகைய மாநாடுகளை நடத்திக் கொண்டே இருக்க வேண்டும். ஆணவக் கொலைகளும், ஜாதி, மத அடிப்படை வாதங்களும் தகர்க்கப்பட மனித நேயத்தையும், பகுத்தறிவையும் மக்களிடம் விதைத்துக் கொண்டே இருப்போம்’’ என்று கேட்டுக் கொண்டதோடு கடவுள் இல்லை என்பதற்கான காரணங்களை ஆய்வு அறிக்கை போல வரிசைப்படுத்திக் கூறினார்.

எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் பேசுகையில்

“பகுத்தறிவுப் பகலவனாகிய தந்தை பெரியார் அவர்கள், கடவுள் மறுப்பாளராய் 95 ஆண்டு காலம் வாழ்ந்தார்கள். ஆனால், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களால் நீண்டகாலம் வாழமுடிவதில்லை. இது நாத்திகத்தின் வெற்றி!

ஆதிக்கத்திற்கும், ஜாதி, மதவாதத்திற்கும் இன்னொரு பெயர்தான் ஆன்மிகம். ஆன்மீகத்தை எதிர்கொள்ளும் ஆற்றல் பெரியாரியலுக்கும் அம்பேத்கர் இயலுக்கும் உண்டு. நாத்திகம் அறிவியல் அடிப்படை யானது. அதுதான் என்றும் வெல்லும்’’ என்று முழங்கினார்.

 


கேரி மெக்லேலண்ட், செயல் அலுவலர் மனிதநேய நன்னெறி ஒன்றியம் (அய்.எச்.இ.யு) லண்டன் பேசுகையில்,

“நான் சிறுவயதில் கத்தோலிக்க கிறித்துவ மதத்தில் வளர்க்கப்பட்டவன். நாளடைவில் மதத்தின் மீதும் அதன் நடைமுறைகள் மீதும் எனக்கு அவநம்பிக்கை ஏற்பட்டது. பிறகு, அய்.எச்.இ.யு அமைப்பில் என்னை இணைத்துக் கொண்டேன். 1952இல் இவ்வமைப்பு தொடங்கப் பட்டு இப்பொழுது 150 அமைப்புகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. அந்த உறுப்பு அமைப்புகளில் திராவிடர் கழகமும் ஒன்றாகும். சிறப்பாக ஏற்பாடு செய்யப் பட்டுள்ள இம்மாநாட்டில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறோம்’’ என்று குறிப்பிட்டார்.

நூல் வெளியீடு

மகாராட்டிரத்தைச் சார்ந்த சுதேஷ் கோடே ராவ்(Sudesh Ghode Rao) அவர்களால் எழுதப்பட்ட ‘Crusaders of Rationalism and Humanism’என்ற நூலை மாநாட்டுத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டார்.

படத்திறப்பு:

மத வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட கோவை ஃபாரூக் அவர்களின் உருவப் படத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். அனைவரும் எழுந்து நின்று “வீரவணக்கம், வீரவணக்கம் _ பகுத்தறிவாளர் ஃபாரூக்குக்கு வீரவணக்கம்’’ என்று கைகளை உயர்த்தி முழங்கினர்.

இறுதியாக திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் நன்றி கூறிட இரவு 9.30 மணிக்கு விழா நிறைவுபெற்றது.

மூன்றாம் நாள் நிகழ்ச்சி

உலக நாத்திகர் மாநாட்டின் நினைவாக திருச்சி அருகிலுள்ள சிறுகனூரில்

உலக நாத்திகர் மாநாட்டின் 3ஆவது நாளான 7.1.2018 அன்று திருச்சி_சென்னை நெடுஞ்சாலையிலுள்ள சிறுகனூர் பெரியார் உலகத் திடலில் உலக நாத்திகர் மாநாட்டிற்கு வருகை தந்த பன்னாட்டு பேராளர்கள், “பெரியார் வாழ்க! நாத்திகம் வாழ்க!’’ என பல்வேறு மொழிகளில் கொள்கை முழக்கமிட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் 190 மரக் கன்றுகளை பேராளர்கள் நட்டனர்.

உலக நாத்திகர் மாநாட்டின் மூன்றாம் நாளான 7.1.2018 அன்று மாலை திருச்சி பெரியார் கல்வி வளாகத்தில் நடைபெற்ற ஆய்வு அமர்வில், தமிழ்நாடு திட்டக்குழுவின் மேனாள் துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் மு.நாகநாதன் சிறப்புரையாற்றினார்.

‘கல்வியில் திறனாய்வு சிந்தனையும், தடையற்ற தேடலும்’ எனும் தலைப்பில் கோ.ஒளிவண்ணன் அவர்களும், ‘ஆத்திகத்தி லிருந்து நாத்திகத்திற்கு’ எனும் தலைப்பில் கல்வியாளர் சந்திரம்மா மஜீம்தார் அவர்களும், ‘பெரியாரின் பகுத்தறிவாளர் மக்கள் இயக்கம்’ எனும் தலைப்பில் வீ.குமரேசன் அவர்களும், ‘பெரியாரியலின் பொருத்தப்பாடு’ எனும் தலைப்பில் முனைவர் ஒய்.சீனிவாசராவ் அவர்களும் உரையாற்றினர்.

+

நிறைவு விழா

உலக நாத்திகர் மாநாட்டின் நிறைவு நாளில்  பிரகடனம் அறிவிக்கப்பட்டது. டாக்டர் ரவிவர்மகுமார், கர்நாடக மேனாள் அட்வகேட் ஜெனரல் சிறப்புரையாற்ற, பன்னாட்டு மனிதநேய நன்னெறி ஒன்றியத்தின் ஆலோசக இயக்குநர் எலிசபெத் ஓ’ கேசி நிறைவுரை வழங்க, மாநாட்டி ன் நிறைவுப் பேருரையை மிக நேர்த்தியான முறையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வழங்க, 2018 ஜனவரி 5, 6, 7 ஆகிய நாட்களில் வெகு சிறப்பாக உலக நாத்திகர் மாநாடு நடந்து முடிந்தது.

 

-உண்மை இதழ், 16-31.1.18