பக்கங்கள்

ஞாயிறு, 10 ஜனவரி, 2016

AP - 9th World Atheist Conference at Vijayawada


ஆந்திர மாநிலம் - விஜயவாடாவில் நடைபெற்ற 9 ஆம் உலக நாத்திகர் மாநாட்டினைத் தொடங்கி வைத்து தமிழர் தலைவர் எழுச்சியுரை

விஜயவாடா,  ஜன.7-_ ‘‘‘கடவுளை மற, மனிதனை நினை’ எனும் தந்தை பெரியாரின் தத்துவப்படி அறிவியல் பார்வை என்பது கடவுள் நிலை மறுக்கப்படும் நிலையில்தான் முழுமையடையும். மனிதனை முன்னேற்றப் பயன்படும்’’ என தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற 9 ஆம் உலக நாத்திகர் மாநாட்டினைத் தொடங்கி வைத்து உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
விஜயவாடா நகரின் பத்தமடா பகுதியில் அமைந் துள்ள சித்தார்த்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கத்தில் இரண்டு நாள் நிகழ்ச்சியாக - ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய நாள்களில் ஆந்திர நாத்திகர் கோரா நிறுவிய நாத்திகர் மய்யம் ஒருங்கிணைந்து நடத்தியது. நார்வே, ஜெர்மனி, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் மற்றும் நாட்டின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் நாத்திகர், பகுத்தறிவாளர், மனித நேயர் அமைப்பினைச் சார்ந்தவர்கள் பெரும் திரளாகப் பங்கேற்ற மாநாட்டினை ஜனவரி 6ஆம் நாள் தொடங்கி வைத்து தமிழர் தலைவர் அவர்கள் எழுச்சிப் பேருரை ஆற்றினார்.
தமிழர் தலைவர் தமது தொடக்கவுரையில் குறிப் பிட்டுப் பேசியதன் சுருக்கம்:
இந்த உலக நாத்திகர் மாநாடு ‘அறிவியல் பார்வை மற்றும் மதச்சார்பின்மையின் தேவை’ (The Necessity of Scientific Outlook and Secularism) எனும் கருத்துப் பொருள் (Theme) ஒருங்கிணைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘அறிவியல் பார்வையின் தேவை என்ன?’ என்பது இன்றைய நிலையில் மட்டுமல்ல; மனித இனம் இவ்வுலகில் தோன்றிய காலம் முதற்கொண்டே கேட்கப்பட்டுவரும் கேள்வியாகும். எதையும் கேள்வி கேட்டு ஆராயும் மனப்பான்மையே அறிவியல் பார்வையின் அடிப்படைக் கூறாகும். வெறும் நம்பிக்கையினைச் சார்ந்த பார்வையும், கடைப்பிடித்தலும் மனிதரிடம் _ குறிப்பாக ஆத்திக மனப்பான்மை உள்ளோரிடமும் நிலவி வந்தாலும் அவர்களிடமும் அறிவியல் பார்வை பற்றிய கண்ணோட்டம் மற்றும் அறிவியல் வளர்ச்சியின் மூலம் ஏற்பட்ட வசதி வாய்ப்புகளை _ அதன் பலன்களை அனுபவிக்கும் நிலைமையும் தொடக்கம் முதல் இருந்தே வந்துள்ளது. வெறும் நம்பிக்கை சார்ந்தோரால், கேள்வி கேட்டு வளர்ந்த அறிவியல் பார்வையினால் ஏற்பட்ட விளைவுகளைப் புறக்கணிக்க முடியவில்லை.
கடவுள் நம்பிக்கை என்பது நம்பிக்கையின் பாற் பட்டது. கேள்வி கேட்கும் அணுகுமுறைக்கு கடவுள் நம்பிக்கைகள் இடமளிப்பதில்லை. ஆனால் அறிவியல் வளர்ச்சியினால் ஏற்பட்ட வசதி வாய்ப்புகளை, கடவுள் நம்பிக்கை சார்ந்த சூழல் பயன்படுத்திக் கொள்ள என்றும் தயங்கியதே இல்லை.
எடுத்துக்காட்டாக, நாட்டிலேயே பணக்காரக் கடவு ளாகக் கருதப்படும் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில், ஆகம விதிகளுக்கு உட்பட்டு உள்ளதாகக் கூறப்படும் கோயிலில் கருவறையில் ஆகம விதிகளில் குறிப்பிடப்படாத அறிவியல் வளர்ச்சி சார்ந்த குளிரூட்டும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. குளிரூட்டும் சாதன வசதி ரிஷிகள் கண்டுபிடித்ததல்ல.
ஆன்மீகவாதிகள் யாரும் நம்பிக்கையின்பாற்பட்ட கடவுள் வழிபாட்டு இடத்தில் அறிவியல் வளர்ச்சியினால் ஏற்பட்ட வசதி கூடாது எனக் கூறுவதில்லை. கோவில் நிர்வாகமும் ஆகம விதிகளில் குறிப்பிடப்படாத அறிவியல் வசதி வாய்ப்பினைப் புறந்தள்ளுவதில்லை. மேலும் அறிவியல் வளர்ச்சியின்மூலம் விளைந்த தொலை பேசி, செல்பேசி பயன்பாடு இன்றி எந்த ஆன்மீகவாதியும் இன்று இருக்க முடியாது. கடவுள் எங்கும் உள்ளார் (omini present) எனக் கூறிக் கொண்டே கடவுள் வழிபாட்டிற்கு அறிவியல் கருவியான ஒலி பெருக்கி (loud speaker)யினைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
உலகப் புகழ்பெற்ற நாத்திக அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் ((Stephen Hawking) உடன் இணைந்து The Grand Design எனும் புத்தகத்தினை எழுதிய பேராசிரியர் லியோனார்டு மிலாடினோவ்(Leonard Mlodinow) தாம் எழுதிய ‘‘நேரிடை நேர்மைச் சிந்தனையாளர்’’ (The Up right Thinkers) எனும் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்:
‘‘பழங்கால மனிதனிடம் இறைச்சியினைச் சமைக்கும் மின் அலை அடுப்பினைக் கொடுத்திருந்தால், அடுப்பிற்குள்ளே சிறு அளவிலான கடவுள் கூட்டம் அடுப்பைப் பற்ற வைத்து உணவைச் சமைக்கிறது. அடுப்பைத் திறந்தவுடன் அக்கடவுளர் கூட்டம் மறைந்து விடுகிறது என கற்பிதம் செய்திருப்பான்.
கி.மு.4000 ஆண்டு காலத்தில் நகர் சார்ந்த வாழ்விடங்கள் உருவான காலத்தில், விரைவான பயண வழிமுறை என்பது ஒரு மணி நேரத்தில் சில மைல்களைக் கடக்கும் ஒட்டகப் பயணமே என இருந்தது. கி.மு. 2000 - 1000 காலக் கட்டத்தில் சக்கரம் தாங்கிய ரதப் பயணம் (மணிக்கு 20 மைல் செல்லும்) விரைவான பயணத்திற்கான வழிமுறை என்றாகியது.
பின்னர் கி.பி. 19ஆம் நூற்றாண்டு வாக்கில் மணிக்கு 100 மைல் பயணம் செல்லத்தக்க நீராவி நகரும் என்ஜின் நடைமுறைப்பட்டது. இப்படி 2000 ஆண்டு இடைவெளி காலத்தில் மணிக்கு 10 மைல் வேகப் பயணம் 100 மைலாக மாற்றம் கண்ட நிலையில், வெறும் 50 ஆண்டு கால அளவில் இந்நிலை 10 மடங்கு அதிகரித்து மணிக்கு 1000 மைல் பயணம் செய்யும் நிலை 1980 வாக்கில் அறிவியல் வளர்ச்சி மூலம் உருவானது. மேலும் மணிக்கு 17000 மைல் வேகத்தில் செல்லும் விண்வெளிப் பயணமும் சாத்தியப்பட்டது.
மற்ற அறிவியல் தொழில்நுட்பத்திலும் குறிப்பாகத் தொலைத் தொடர்பிலும் பரிணாம வளர்ச்சி ஏற்பட்டது. 19ஆம் நூற்றாண்டு வாக்கில் ராய்ட்டர் செய்தி நிறுவனம், நகரங்களுக்கிடையிலான பங்குச் சந்தை விலை விவர பரிமாற்றத்திற்குப் புறாக்களையே பயன்படுத்தி வந்தது. 20ஆம் நூற்றாண்டு காலத்தில் தொலைத் தொடர்புக்கு தொலைபேசி பயன்பாடு ஏற்பட்டது. மக்கள் தொகையில் 75 விழுக்காட்டினரிடம் தொலைப் பேசி பயன்பாடு நடைமுறையாக்கம் பெற 81 ஆண்டுகள் பிடித்தது. ஆனால் இருபத்து எட்டு ஆண்டுகளிலேயே செல்பேசி பயன்பாடு மக்களிடம் அதே அளவு பயன்பாட்டினை எட்டியது. 13 ஆண்டுகளில் ஸ்மார்ட் பேசி அந்த வளர்ச்சியினைப் பிடித்தது. அண்மைக் காலத்தில் மின்னணு ஆற்றல், செய்தி அனுப்பிடும் தொலைத் தொடர்புக்கு, தொலைபேசி மற்றும் செல்பேசிப் பயன்பாட்டினைப் பழமையாக்கி, அதனை மட்டுப்படுத்தியது. இதன் மூலம் தொலைத்தொடர்புச் சாதனமான செல்பேசி, பேசுவ தற்கான கருவி எனும் நிலையிலிருந்து சட்டைப் பையில் வைத்துப் பயன்படுத்தும் கணினி எனும் கருவியாக மாற் றம் கண்டது.’’
இப்படி அறிவியல் வளர்ச்சி என்பது மனித வாழ் வில், மானிடப் பயன்பாட்டிற்கு, இலகுவான வசதியுடன் கூடிய வாழ்க்கை முறைக்கு பயன்படும் நிலைக்கு வந்துள்ளது. இந்த வளர்ச்சியின் மூலம் உருவான கருவிகள் எதுவும் கடவுள் கண்டுபிடித்தவை அல்ல; வெறும் நம்பிக்கை சார்ந்த கடவுள் விஷயத்தினை விடுத்து, கேள்வி கேட்கும் பகுத்தறிவினால் கிடைத்த விளைச்சலே இப்படிப்பட்ட அறிவியல் கருவிகள். அத் தகைய பகுத்தறிவினால் விளைந்ததே நாத்திகம் _ எதை யும் கேள்விக்கு உட்படுத்திப் பார்க்கும் அணுகுமுறை. இத்தகைய அறிவியல் மனப்பான்மையின்மை பெருக்கு வதை இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 51எ(எச்) பிரிவு குடிமக்கள் ஆற்றிட வேண்டிய அடிப்படைக் கடமை யாக வலியுறுத்துக்கிறது.
அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் அறிவியல் மனப்பான்மையானது நாட்டில் நிலவிடும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளை, தெய்வீக விதிப் பாடாகக் கருதாமல் உள்ளீடு செய்து, ஆய்வு மேற்கொண்டு, கருத்துடன் கவனித்து தொடர்பு படுத் திப் பார்க்கும் போக்கிற்கு நம்மை அழைத்துச் செல்லும்.
வாழ்வில் அனைத்தையும் துறந்ததாகக் கூறும் சந் நியாசிகள், அறிவியல் வளர்ச்சியின் மூலம் கிடைத்திட்ட வசதி வாய்ப்புகளை துறக்க முடியவில்லை. எளிமையான நிலையிலிருந்து அறிவியல் தாக்கத்தினால் அதிதொழில் நுட்ப(பிவீ-tமீநீலீ) சந்நியாசியாக உயர்வு, மாற்றம் பெற்றுள்ளனர்.
அறிவியல் வளர்ச்சி மனித மேம்பாட்டிற்குப் பயன்படும் அந்த வேளையில், அறிவியல் தொழில்நுட்ப கருவிகளின் மூலம் செய்தி மின்னணு ஊடகங்கள், தொலைக்காட்சி அலைவரிசைகள் மக்களிடம் _ குறிப் பாக குழந்தைகள் மற்றும் இளைஞரிடம் அறிவியலுக்குப் புறம்பான மூடநம்பிக்கை, ஜோதிடச் செய்திகளைப் புகுத்தி வருகின்றன. இதை எதிர்த்துப் போராட வேண்டிய பொறுப்பு நாத்திக, பகுத்தறிவாளர் அமைப்பி னருக்கு உள்ளது. மூடநம்பிக்கைகளை ஒழித்து, ஏற்றத் தாழ்வுகளைப் போக்கி கண்ணியத்துடன், சுயமரியா தையுடன் வாழ்ந்திட அறிவியல் வளர்ச்சிப் போக்கினைப் பயன்படுத்தும் நிலைகள் பெருகிட வேண்டும்.
இந்த உலக நாத்திகர் மாநாட்டின் அடுத்த நோக்க மாக மதச் சார்பின்மை அமைந்துள்ளது. மதம் எந்த அளவிற்கு மக்களிடையே வேறுபாட்டினை, அடிமைத் தனத்தினை வளர்த்துள்ளது _ ஏற்றத் தாழ்வினை ஏற் படுத்தியுள்ளது என்பதனை வரலாறு நன்றாகவே உணர்த்தியுள்ளது. இதனை உணர்ந்துதான் இந்தியா அரசியல் விடுதலை பெற்று, நாட்டினை ஆட்சி செய்திட, உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தில், அரசு மதச்சார்பற்ற தன்மையுடன் செயல்பட வேண்டும் என முகப்புரையிலே தெளிவாகக் குறிப்பிடப்படும் சூழல்கள் உருவாகின.
மக்களை ஆட்சி செய்திடும், மக்களால் தேர்ந் தெடுக் கப்பட்ட அரசும் அரசமைப்புச் சட்டம் கூறும் மதச்சார் பற்ற தன்மையில், எந்த மதமும் மனிதரை அடிமைப்படுத்தி, வேறுபடுத்திப் பார்த்திடும் போக்கி னைக் களைந்திடும் வகையில் செயல்பட வேண்டும். அதற்கான வலியுறுத் தலை, அரசினர் போக்கினை நெறிப்படுத்துகின்ற வகை யில் நாட்டில் உள்ள நாத்திக பகுத்தறிவாளர் அமைப்புகள் செயல்பட முன்வர வேண்டும்.
உலக நாத்திகர் மாநாட்டினை அடுத்த முறை ஒருங்கிணைத்து தமிழ்நாட்டில் நடத்திட திராவிடர் கழகம் அணியமாக உள்ளது. அதற்கான அழைப்பினை இந்நாட்டு, பன்னாட்டு நாத்திக, பகுத்தறிவாளர் மனித நேய அமைப்பினருக்கு இந்த உலக நாத்திகர் மாநாட்டி லேயே விடுக்கின்றோம்.
இவ்வாறு தமிழர் தலைவர் தமது தொடக்கவுரையில் குறிப்பிட்டார்.
கழகத்தின் மரியாதை - பாராட்டு
உலக நாத்திகர் மாநாட்டினைத் தொடங்கி வைத்து உரையாற்றிய பின்னர் மாநாட்டில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களை, வெளிநாட்டுப் பேராளர்களை திராவிடர் கழகத்தின் சார்பாக தமிழர் தலைவர் ஆசிரி யர் சால்வை அணிவித்து மரியாதை செய்து பாராட் டினார். மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் தலைவர் திருமதி மைத்ரி, மாநாட்டுத் தலைவர் முனைவர் வோல் கர் முல்லர் (ஜெர்மனி), பேராளர்கள் நார்வே நாட்டு மனிதநேய அமைப்புத் தலைவர் ராபர்ட் ரஸ்டட், ஜெர் மன் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆல்பிரட் ஹரால்ட் பெட்ஜோல்டு, டெக்சாஸ் அமெரிக்க நாத்திகர் அமைப் பினைச் சார்ந்த அரோன் ரா மற்றும் மராட்டிய மாநில பகுத்தறிவாளர் அமைப்பினைச் சார்ந்த அவினாஷ் பாட்டீல் ஆகியோரை தமிழர் தலைவர் பாராட்டினார்.
மாநாட்டு தொடக்க விழா நிகழ்ச்சி
உலக நாத்திகர் மாநாட்டிற்கு வருகை தந்த இந்நாட்டு, பன்னாட்டு பேராளர்களை வரவேற்று நாத்திகர் மய்யத்தின் தலைவர் திருமதி மைத்ரி உரையாற்றினார். மாநாட்டில் ஜெர்மன் நாட்டு சுதந்திர மனித சிந்தனை யாளர் அமைப்பினைச் சார்ந்த முனைவர் வோல்கர் முல்லர் தலைமை உரை ஆற்றினார். தமிழர் தலைவரின் தொடக்கவுரைக்கு முன்பாக மாநாட்டின் சிறப்பு விருந்தினர் மராட்டிய மாநில அந்தசிரத்த நிர்மூலன் சமித அமைப்பின் தலைவர் அவினாஷ் பாட்டீல் உரை யாற்றினார். பின்னர் மாநாட்டின் மாண்பமை விருந்தி னர்கள் ராபர்ட் ரஸ்டட் (நார்வே), ஆல்பிரட் ஹரால்ட் பெட்ஜோல்டு (ஜெர்மனி) ஆகியோர் உரையாற்றினர்.
ஒளிப்பதிவு திரையிடல்
மாநாட்டு பிற்பகல் நிகழ்ச்சியில் அண்மையில் தமிழகத்தில் சென்னை மற்றும் கடலூர் பகுதிகளில் ஏற்பட்ட மழை வெள்ளப் பேரழிவின் பொழுது திரா விடர் கழகம் ஆற்றிய மீட்புப் பணி, உதவிப் பணி, நடத் திய மருத்துவ முகாம்கள் பற்றிய ஒளிப்பதிவு ஆங்கில விரிவுரைப் பின்னணியுடன் மாநாட்டுப் பேராளர் களுக்குத் திரையிட்டுக் காட்டப்பட்டது. திரையிடலுக்கு முன்பாக தமிழர் தலைவர் திராவிடர் கழகம் ஆற்றிய பணி மற்றும் தந்தை பெரியாரின் பகுத்தறிவுரை முழக் கமான “கடவுளை மற, மனிதனை நினை’’ எனும் நடை முறையின் பிரதிபலிப்பாக திராவிடர் கழகப் பணி, மற்றும் மனிதநேயத் துளிர்வு அமைந்தது என குறிப்பிட் டுப் பேசினார்.
ஒளிப்படக் கண்காட்சி
மாநாடு தொடங்குவதற்கு முன்னதாக விஜயவாடா நாத்திகர் மய்யம் ஏற்பாடு செய்திருந்த ஒளிப்படக் கண்காட்சி திறக்கப்பட்டது. நார்வே நாட்டு மனித நேய அமைப்பின் தலைவர் ராபர்ட் ரஸ்டட் கண்காட்சியினை, தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் நாத்திகர் மய்யத்தின் செயல் தலைவர் முனைவர் ஜி.விஜயம் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார். நாத்திகர் மய்யத்தின் 75 ஆண்டு காலத்திற்கும் மேலான செயல் பாடுகள், நடத்திய மாநாடுகள் பற்றிய ஒளிப்படங்கள் இடம் பெற்றிருந்தன. தந்தை பெரியாருடன் கோரா கலந்து கொண்ட நிகழ்ச்சிகள், தமிழர் தலைவர் பங் கேற்ற நாத்திகர் மய்ய நிகழ்ச்சிகள், திருச்சியில் திராவிடர் கழகம் நடத்திய உலக நாத்திகர் மாநாட்டு ஒளிப் படங்கள் பல பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
பிற்பகலில் மாநாட்டு நோக்கத் தலைப்பில் கருத்த ரங்கம் நடைபெற்றது. மாநாட்டு நிகழ்ச்சிகள் இரண்டா வது நாளாக ஜனவரி 7ஆம் நாளும் தொடருகின்றன.  உலக நாத்திகர் மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் பெரும் திரளாகச் சென்று பங்கேற்றனர்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 9ஆவது பன்னாட்டு நாத்திகர் மாநாடு மாட்சிகள் (6.1.2016)
உலக நாத்திகர் மாநாட்டு நிழற்படக் கண்காட்சியை நார்வே நாட்டு மனிதநேயர் ராபர்ட் ரஸ்டட் திறந்து வைத்தார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, நாத்திக மய்ய செயல் இயக்குநர் டாக்டர் விஜயம் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
மாநாட்டில் கலந்துகொள்ள தமிழகத்திலிருந்து வந்திருந்த பகுத்தறிவாளர் பேராசிரியர் க.திருமாறன், அவர்தம் இணையர் மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தோழர்களில் ஒரு பகுதியினர்.
மாநாட்டைத் தொடங்கி வைக்க வந்த தமிழர் தலைவருக்கு தெலங்கானா நாஸ்திக சமாஜத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜீடி.சாரய்யா சார்பில் அவரின் மகன் ஸ்பார்டகஸ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
தொடக்கவுரையாற்ற வந்த தமிழர் தலைவருக்கு ஆந்திர நாத்திகர் கோரா குடும்பத்தினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
9-ஆம் உலக நாத்திகர் மாநாட்டு மலரினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டார். 
மாநாட்டைத் தொடங்கி வைத்து, “Necessity of Scientific Outlook and Secularism” என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உ ரையாற்றினார்.
உலக நாத்திகர் மாநாட்டில் முதல் நாள் கலந்து கொண்ட வெளிநாட்டு நாத்திகர்கள், அறிஞர்கள் முக்கிய பிரமுகர்கள்
உலக நாத்திகர் முதல்நாள் மாநாட்டில் கலந்துகொண்டோர் 

உலக நாத்திகர் மாநாட்டு ஒளிப்படக் கண்காட்சியினை தமிழர் தலைவர்  பார்வையிடுகிறார்
நார்வே மனிதநேய சங்கத்தின் தலைவர் ராபர்ட் ரஸ்டட் அவர்களுடன் தமிழர் தலைவர்...
மாநாட்டிற்கு வருகை தந்த மூத்த பகுத்தறிவாளர் பேராசிரியர் க.திருமாறன் - செந்தாமரை இணையருக்கு தமிழர் தலைவர் மற்றும் டாக்டர் விஜயம் ஆகியோர் சிறப்பு செய்தனர்
ஒடிசா மாநிலத்திலிருந்து மாநாட்டிற்கு வருகை தந்த பகுத்தறிவாளர் மற்றும் ஜாதி மறுப்புத் திருமண அமைப்பின் தலைவர் சி.எஸ்.டி.வால்டர் மற்றும் தோழர்களுடன் தமிழர் தலைவர்...
அனைத்திந்திய பகுத்தறிவாளர் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக் மற்றும் பொறுப்பாளர்களுடன் தமிழர் தலைவர்....

பெரியார் புத்தக நிலையத்தின் சார்பில் வைக்கப்பட்டிருந்த புத்தக அரங்கினை
தமிழர் தலைவர் பார்வையிடுகிறார்

உலக நாத்திகர் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் விஜயம் மற்றும் தமிழர் தலைவருடன் திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் (விஜயவாடா, 6.1.2016)
நார்வே நாட்டு மனிதநேய சங்கத் தலைவர் ராபர்ட் ரஸ்டட்டிற்கு...

அமெரிக்க நாட்டு டெக்சாஸ் மாநிலத்தைச் சார்ந்த
நாத்திக அமைப்பின் பொறுப்பாளர் அரோன் ராவிற்கு....
ஜெர்மன் நாட்டு சுதந்திர சிந்தனையாளர் அமைப்பின் தலைவர் டாக்டர் வோல்கர் முல்லருக்கு...
ஜெர்மன் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பகுத்தறிவாளர் ஆல்பிரட் ஹரால்டு பெட்சோல்டிவிற்கு...
மராட்டிய மாநிலம் அந்தசிரத நிர்மூலன்சமிதி அமைப்பின் தலைவர் அவினாஷ் பாட்டீலிற்கு...

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் கேரள யுக்திவாதி சங்கத் தலைவர் யு.கலாநாதன்

பஞ்சாப் மாநில தர்க்கசீல சங்க பொறுப்பாளர்கள் தமிழர் தலைவருடன் உரையாடுகின்றனர்



அரியானா மாநிலம் குருசேத்திரம் - சுவாமி மானவவாடி தமிழர் தலைவருக்கு சிறப்பு செய்கிறார்
-விடுதலை,6,7.1.16

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இன்று (6.1.2016) 9 ஆவது பன்னாட்டு நாத்திகர் மாநாடு தொடங்கியது. உலக நாத்திகர் மாநாட்டு இலச்சினையை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி, நார்வே நாட்டு மனிதநேயர் ராபர்ட் ரஸ்டட் ஆகியோர் திறந்துவைத்து மாநாட்டு நோக்கம் குறித்து உரையாற்றினர். நாளையும் (7.1.2016) மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.
-விடுதலை,6,.1.16


-விடுதலை,7,.1.16