சென்னை, செப்.21 உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் (17.9.2017) மகாராட்டிரா, கருநாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் கொண்டாடப்பட்டது.
தமிழர்களின் தன்மான உணர்வைத் தட்டி எழுப்பிய உலகத் தலைவர், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் 17.9.2017 அன்று இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விவரம் வருமாறு:
மும்பை
தந்தை பெரியார் அவர்களின் 139 ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா 17.9.2017 அன்று மும்பை திராவிடர் கழகத்தின் சார்பில் தாராவி - கலைஞர் மாளிகையில் மாலை 7.30 மணிக்கு சிறப்புடன் தொடங்கியது.
விழாவுக்கு மும்பை தி.க. தலைவர் பெ.கணேசன் தலைமை வகித்தார். முன்னதாக மும்பை தி.க. செயலாளர் இ.அந்தோணி கடவுள் மறுப்புக் கூறி அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து மும்பை ப.க. தலைவர் அ.இரவிச்சந்திரன் தொடக்கவுரையாற்றி, விழாவை ஒருங்கிணைத்தார்.
அய்யா உருவப் படத்திற்கு விழாவில் கலந்துகொண்ட பெண்கள் அனைவரும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். விழாத் தலைவர் உரைக்குப் பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாராவி கிளை செயலாளர் ஞான.அய்யாபிள்ளை, சுங்கத் துறை அதிகாரி பொ.அன்பழகன், புறநகர் தி.மு.க. இலக்கிய அணியின் செயலாளர் இரா.வ.தமிழ்நேசன், தமிழ் ஓட்டுநர்கள் சங்கத்தைச் சேர்ந்த இரவிரஜினி, புறநகர் தி.மு.க. பகுத்தறிவு அணி பொறுப்பாளர் நெல்லை பைந்தமிழ், ஜெய்பீம் அறக்கட்டளை நிர்வாகி இராஜாகுட்டி, விழித்தெழுக இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் சிறீதர் தமிழன், ஈஸ்வரி தங்கப்பாண்டியன், மும்பை தி.க. பொருளாளர் அ.கண்ணன், லெமூரியா அறக்கட்டளை சார்பில் மறைந்த பெரியார் பெருந்தொண்டர் சீர்வரிசை சண்முகராசன் நினைவாக வழங்கப்படும் பெரியார் விருது பெற்ற மாணவிகள் அமிசா, அமராவதி ஆகியோர் அய்யாவைப்பற்றி சிறப்பாக உரையாற்றினர்.
தொடர்ந்து மும்பை மாநகரப் பொறுப்பாளர் கருவூர் பழனிச்சாமி, மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றத் தலைவர் பேராசிரியர் சமீராமீரான், தமிழ் லெமூரியா இதழாசிரியர் சு.குமணராசன் ஆகியோர் தந்தை பெரியாரின் அரிய கருத்துகளை எடுத்துரைத்தனர்.
கழகத் தோழர்கள் செ.ரோபின் நன்றி கூறினார்.
விழாவில், சோ.ஆசைத்தம்பி, சோ.சவுந்திரபாண்டியன், மும்பை கழகத் துணைச் செயலாளர் ஜெ.வில்சன், அ.இராதாகிருட்டிணன், சா.பொன்னம்பலம், அய்.செல் வராஜ், அணுசக்தி நகர் தமிழ் மன்றச் செயலாளர் பு.தேவராசன், இரா.தங்கப்பாண்டியன், மு.கணேசன், கே.இராசன், க.கவுதமன், க.மலர், க.உமா, இரா.சொர்ணம், செல்வி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். வந்திருந்த அனைவருக்கும் இனிப்பு, சிற்றுண்டி வழங்கப்பட்டது.
தலைமை நிலையத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த அய்யா பிறந்த நாள் சுவரொட்டிகள் மும்பை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டன.
பெங்களூரு
பெங்களூரு பெரியார் மய்யம், தலைவர் கி.வீரமணி அரங்கில் திராவிடர் அகத்தில் 17.9.2017 காலை 10.30 மணியளவில் அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும், தமிழகத்தின் விடிவெள்ளி அறிஞர் அண்ணாவின் 109 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.
மாநில செயலாளர் இரா.முல்லைக்கோ கழகத் தோழர்கள் அனைவரையும் வரவேற்றும், இணைப்புரையும் ஆற்றினார். கருநாடக மாநிலத் தலைவர் மு.சானகிராமன் தலைமையேற்று உரை நிகழ்த்தினார்.
எழுச்சிமிகு கழகக் கொடியை பெரியார் நகர் பகுதி தலைவர் பெ.பாண்டியன் பலத்த கரவொலிக்கிடையே உயர்த்தி வைத்தார். தந்தை பெரியார் படத்தினை ஓசூர் சி.தேவனும், அறிஞர் அண்ணாவின் படத்தினை கவிஞர் வீ.இரத்தினாவும் திறந்து வைத்தனர்.
மறைந்த மாணவி அனிதாவின் படத்தினை பொதுக்குழு உறுப்பினர் இரா.இராசாராமும், மறைந்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் அவர்களின் படத்தினை ஆ.வந்தியத்தேவனும் திறந்து வைத்தனர்.
மறைவெய்திய அனிதா, இதழாளர் கவுரி லங்கேஷ், வழக்குரைஞர் பிரிவு செயலாளர் ஜெ.அருண்கதிரவனின் சிறிய மாமியார் வரலட்சுமி ஆகியோர்களுக்கு இரு நிமிடங்கள் அனைவரும் எழுந்து நின்று அமைதி மரியாதை செலுத்தினர்.
தோழர் நரசிம்மமூர்த்தி, ஆ.வந்தியத்தேவன் ஆகி யோருக்கு தங்கம் இராமச்சந்திரா அறக்கட்டளையின் சார்பில் பயனாடைகளையும், பரிசுப் பொருள்களையும் வழங்கி மகிழ்வுபடுத்தினர்.
பெரியார் பிஞ்சு இராவணன் உள்ளிட்ட மழலை யர்களுக்குப் பேனா வழங்கப்பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
தந்தை பெரியார் பேசிய பேச்சினை 1984 இல் திராவிடர் கழகம் வெளியிட்ட நூலினை ஆதாரமாகக் கொண்டு நீட் தேர்வினை எதிர்த்து பெரியாரின் முதுபெரும் தொண்டர் முத்துசெல்வன் நெடிய உரையாற்றினார்.
இறுதியாக, மறுமலர்ச்சி தி.மு.க. வெளியீட்டு செய லாளர் ஆ.வந்தியத்தேவனுக்கு, மாநில தி.க. தலைவர் மு.சானகிராமன் பயனாடை அணிவித்து சிறப்பு செய்து உரையாற்ற அழைத்தார். சுமார் ஒன்றரை மணிநேரம் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, மறைந்த அனிதா, பகுத்தறிவு நெறி இதழாளர் கவுரி லங்கேஷ் ஆகியோரைப்பற்றி நெடியதொரு உரை நிகழ்த்தினார்.
மாநில துணைச் செயலாளர் வே.நடராசன் எழுச்சிமிக்க நன்றியுரை நிகழ்த்தினார்.
மூத்த உறுப்பினர் வாசுதேவன் பகுத்தறிவு நூல்களை அனைவருக்கும் வழங்கினார்.
இறுதியாக, பெரியாரின் பிறந்த நாளினை மகிழ்வுடன் நினைவுகூறும் வண்ணம் மாநில துணைத் தலைவர் பு.ர.கஜபதி - செயலட்சுமி இணையர் வந்திருந்த அனை வருக்கும் புலால் உணவு வழங்கி சிறப்பித்தனர். முத்துமணி, வினோத் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள், மகளிர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கேரளா
கேரள மாநிலம் சேர்தலா அருகிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில், பணிபுரியும் பொறியாளர்கள் இரா.சு.பாஸ்கர், மனோரஞ்சித், மணிகண்டன், சிலம்பரசன், ரஞ்சித் ஆகியோர் 17.9.2017 அன்று வைக்கம் தந்தை பெரியார் நினைவகம் சென்று, அய்யாவின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்வு முடிந்ததும், கலந்துகொண்ட நண்பர்களுக்கு அசைவ விருந்து அளித்து தந்தை பெரியாரின் 139 ஆம் ஆண்டு பிறந்த நாள் நிகழ்வு இனிதே கொண்டாடப்பட்டது...
-விடுதலை,21.9.17