90 ஆண்டு இயக்க சாதனை, பெரியார் தொண்டின் விளைச்சலைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர்!
சென்னை, அக்.29_ ஜெர்மன் பகுத்தறிவாளர் கள் மனித உரிமை அமைப்பினைச் சேர்ந்த வர்கள் சென்னைப் பெரியார் திடலுக்கு நேற்று மாலை (28.10.2015) வருகை தந்தனர். தமிழர் தலைவர் தலைமையில் அவர்களுக்கு வரவேற்பு, பாராட்டு அளிக்கப்பட்டது.
90 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் வீறு நடைபோடும் சுயமரியாதை இயக்கம் தந்தை பெரியார் அவர்களின் தொண்டால் ஏற்பட் டுள்ள மாற்றங்கள் குறித்து அறிந்து வியப்பில் ஆழ்ந்தனர்.
பகுத்தறிவாளர் கழகம் சார்பில் சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் நேற்று (28.10.2015) மாலை தமிழகம் வருகைதந்துள்ள அய்ரோப்பிய மனித நேய அமைப்புத் தலைவர் டாக்டர் வோல்கெர் முல்லர், ஜெர்மன் மனித நேய, சுதந்திர சிந்தனையாளர் சங்க செயலாளர் கேத்ரின் ஜுரா மற்றும் ஜெர்மன் மனித நேய இளைஞர் குழுவினருக்கு பாராட்டுவிழா நடை பெற்றது.
கேத்ரின் ஜுராவை அறிமுகப்படுத்தி பகுத்தறி வாளர் கழகப் பொருளாளர் தமிழ்செல்வன் உரை யாற்றினார். டாக்டர் வோல்கெர் முல்லர்குறித்து பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில அமைப்புச் செய லாளர் இரா.தமிழ்செல்வன் அறிமுக உரையாற்றினார்.
பகுத்தறிவாளர் கழகப்பொதுச்செயலாளர் வீ.குமரேசன் விழாத் தொடக்க உரையாற்றினார்.
டாக்டர் வோல்கெர் முல்லர் தம்முடைய அமைப் பின் பணிகளை விளக்கிக்கூறி உரையாற்றினார். கேத்ரின் ஜுரா உரையாற்றுகையில் நாத்திகம், சுயமரியாதை மனிதநேயக் கருத்துகளை வலியுறுத்தி 90 ஆண்டுக.ளாக இயங்கிவரும் திராவிடர் கழகம் குறித்து அறிந்து மிகவும் வியந்தார்.
பகுத்தறிவாளர் கழகப் புரவலர், பெரியார் மணி யம்மை பல்கலைக்கழக வேந்தர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விழாத் தலைமையேற்று டாக்டர் வோல்கெர் முல்லர், கேத்ரின் ஜுரா ஆகியோருக்கு பயனாடை அணிவித்து, இயக்க வெளியீடுகளான ஆங்கில நூல்களை வழங்கிப் பாராட்டினார்.
விருந்தினர்களுக்குப் பயனாடை!
ஜெர்மன் மனித நேய இளைஞர் குழுவைச் சேர்ந் தவர்களான மிடாலா, லியோனி பியா, ஜார்ஜ், பாஸ்கல், பால், லூய்சா, மார்கோ, லாரென்சியா, லியோ, டேனியல் மற்றும் விஜயவாடா கோரா நாத்திக மய்யத்தைச் சேர்ந்தவரான அரி.சுப்பிரமணியம் ஆகியோருக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், மேனாள் மேயர் சா.கணேசன், திராவிட வரலாற்று ஆய்வு மய்யத் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெகதீசன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்த திவாகர், தங்க.தனலட்சுமி, சேரலாதன், பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் கி.சத்தியநாராயணன், தமிழ்ப்பணி இதழ் ஆசிரியர் வா.மு.சே. திருவள்ளுவர், பெரியார் மணியம்மை மருத்துவமனை பல் மருத்துவர் தேனருவி, பகுத்தறிவு ஆசிரியர் இராசேந்திரன் ஆகியோர் பயனாடைகளை அணிவித்து, இயக்க வெளியீடுகளான ஆங்கில நூல்களை வழங்கினார்கள்.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தர், பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் ஆசிரியர் அவர்கள் உரையில் குறிப்பிட்டதாவது:
ஆசிரியர் விளக்கவுரை வெவ்வேறு நாடுகளிலிருந்து ஒரு குடும்பமாக நாம் இங்கே இணைந்திருப்பது மிகப்பெரிய வாய்ப்பாகும். நீங்கள் ஜெர்மனிலிருந்து வந்துள்ளீர்கள். இங்கே தமிழ் நாட்டில் நாங்கள் இருக்கிறோம். நம்மை அன்புடன் சுயமரியாதை, மனித நேயம் இணைக்கிறது. விஜய வாடாவிலிருந்து உங்களை இங்கு அழைத்துவந்துள்ள கோரா மய்யத்தைச் சேர்ந்த அரி.சுப்பிரமணியம் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். கோரா மய்யத்தடன் இணைந்து நாத்திகக் கருத் துகளைப் பரப்பி வருகிறோம்.
பெரியார் திடல் திராவிடர் கழகத்தின் தலைமை யகம்., திராவிடர்கழகம் மனித நேயத்தை அடிப்படை யாகக் கொண்ட இயக்கம். மனிதன்மட்டுமே சிந்திப் பவன். மனிதன் விலங்குகளிலிருந்து வேறுபடுவது அதில்தான். சுயமரியாதையின் நோக்கம் என்று வரும்போது, நாங்கள் உங்களை மதிக்கிறோம். நீங்கள் எங்களை மதிக்கிறீர்கள். நம்முடைய நோக்கம் விடுதலை, சகோதரத்துவம், சமத்துவம் வேண்டும் என்பதுதான்.
இந்தியா ஒரு துணைக்கண்டம் என்பதை அறி வீர்கள். சமூகத்தில் பாகுபாடுகள் ஜாதிய முறையால் ஏற்பட்டு உள்ளன. இந்திய சமூகத்தில் ஒருவரின் சமூக அந்தஸ்து என்பது பிறப்பின் அடிப்படையில் உள்ளது. அடுக்கு முறையில் ஜாதி அமைப்பு உள்ளது. ஜாதீய முறை மனிதர்கள் ஏற்றத்தாழ்வுடன் பாகுபாடுகளைக் கொண்டுள்ளது. தீண்டத்தகாதவர்கள், பார்க்கக் கூடாதவர்கள் என்று இருக்கின்ற ஜாதீய அமைப்பு முறை இருக்கிறது. அரசமைப்பு சட்டத்தில் பிரிவு 17இன் மூலமாக தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்று கூறப்பட் டாலும், நடைமுறையில் ஜாதீய முறைகளால் முரண்பாடுகள் அப்படியே உள்ளன. சட்டத்தில் ஜாதி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பிறவிப் பேதம் பேசும் வருண தர்மம் இந்து வர்ணாசிரம தர்மப்படி, ஜாதிய முறை நான்கு வர்ணங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் உள்ள ஜாதி அமைப்பு முறைகுறித்து ஜெர் மனியிலிருந்து வந்திருக்கக் கூடிய உங்களால் புரிந்து கொள்வது சற்று கடினமே. ஜாதிய முறை என்பது சமத்துவம் இல்லாததாக, படிக்கட்டுமுறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முதல் படிக்கட்டில் பார்ப்பனர், இரண்டாம் படிக்கட்டில் சத்திரியர், மூன்றாம் படிக்கட்டில் வைசியர் இந்த மூன்று பிரிவினருக்கும் அடிமையாக நான்காம் நிலையில் இருக்கும் நிலை. அடிமையாக இருப்பவர்கள் தங்கள் அடிமைத்தனத்தை அப்படியே ஏற்றக்கொண்ட அவலம்.
இந்த நிலை ஏன் என்று கேட்கின்ற மனித நேய அமைப்புதான் திராவிடர் கழகம். 90 ஆண்டுகளுக்கு முன்பே கேட்டவர் தந்தை பெரியார். சுயமரியாதை இயக்கத்தை 1925ஆம் ஆண்டில் தொடங்கினார்.
மனிதரில் ஒருவருக்கொருவர் சரிசமமாக உட்கார முடியாது. தொடடுக்கொள்ள முடியாது. தீண்டாமை என்று மனிதன் தொட்டால் மாசு (Pollution) ஏற்படுகிறது என்றால், மற்ற வகைகளில் (External factors) வெளிப்பொருள்களால் ஏற்படலாம். ஆனால், மனிதனை மனிதன் தொட்டுக்கொள்வதில் தீட்டு ஏற்படுகிறது என்று குளிக்கிறான். பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு ஏன் என்று தந்தை பெரியார் கேட்டார். மக்கள் தொகையில் பாதியளவு உள்ள பெண்கள் நான்கு வர்ணங்களுக்கும்கீழ், அய்ந் தாவது நிலையில் அவர்ணஸ்தர்கள் என்கிற ஆறாவது நிலையில் ஆண்களுக்கு அடிமைகளாக
ஜெர்மன் பகுத்தறிவாளர்கள் வருகை..
பெண்களை வைத்துள்ளார்கள். பெண்கள் சுயமாக எதையும் செய்துவிடமுடியாது. கல்வி உரிமை கிடையாது. இதையெல்லாம் மாற்றியது திராவிடர் இயக்கம். தந்தை பெரியார் பணிகளின்மூலமாக பாகுபாடுகள் ஒழிக்கப்பட்டன. இயக்கத்தின்மூலம், பிரச்சாரத்தின்மூலம் மக்களிடையே சென்று கருத்துகளை பரப்பினார். எதிர்ப்பு எங்கிருந்து வந்தது என்றால், யாருக்காகப் பேசினாரோ அவர்களிடமிருந்தே வந்தது. மேடையில் பெரியார் பேசிக்கொண்டிருக்கும் போது அழுகிய முட்டை, மலம், செருப்பு ஆகியவற்றை அவர்மீது வீசினார்கள். அதை யெல்லாம் பொருட்படுத்தாமல், அந்த மக்களுக்காகவே தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார். மக்களிடையே பிரச்சாரம் செய்ததுபோல், பத்திரிகைகளையும் அவர் நடத்தினார்.
பிரச்சாரம் - செயல்பாடுகள்
மேற்கத்திய நாடுகளில் நாத்திக அமைப்பு செயல்படுவதற்கும் இங்கே செயல்படுவதற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், இங்கே மக்கள் இயக்கமாக இயங்கிவருகிறது. படித்தவர்களை மட்டும் கொண்ட தில்லை. சாதாரண மக்களையும் கொண்ட இயக்கமாக இயங்கி வருகிறது. தந்தை பெரியார் பாமர மக்களும் பகுத்தறிவைப் பெறச் செய்தார். அப்படி செய்தபோது எதிர்ப்பு அவர்களிடமிருந்தே வந்தது. உலகில் வேறு எவருக்கும் இதுபோன்ற எதிர்ப்புகள் இருந்திருக்காது. பழைமைகள் குறித்து தந்தைபெரியார் கேள்வி கேட்டார். எதிர்ப்புகளுக்கிடையே தொடர்ந்து பிரச்சாரம் செய்து கொண்டே இருந்தார். கொள்கைகளை பேசியதோடு நிறுத்தாமல் செயல்படுத்திக்காட்டியவர் தந்தை பெரியார்.
செய்தி நிறுவனங்கள் எப்படிப்பட்ட செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்பதை நன்கு அறிவீர்கள். ஆகவேதான், கொள்கைகளைப் பரப்புவதற்காகவே தந்தை பெரியார் பல பத்திரிகைகளை நடத்தினார். குடியரசு, ரிவோல்ட் எனும் ஆங்கில வார இதழ், பகுத்தறிவு, புரட்சி என்று பல ஏடுகளை நடத்திவந்தார். பத்திரிகைகள் மூலமாக பிரச்சாரம் செய்துவந்தார். 40 ஆண்டுகளுக்கு முன்பாக உண்மை இதழைத் தொடங்கினார். இன்றும் வந்துகொண்டிருக்கிறது. குழந்தைகளுக்கான இதழ் பெரியார் பிஞ்சு வெளிவருகிறது. 80ஆண்டுகளாக விடுதலை நாளிதழ் மூடநம்பிக்கை, சினிமா, அரசு விளம் பரங்கள் ஏதுமின்றி நடத்தப்படுகிறது.
திராவிடர் கழகம் தந்தை பெரியாரின் கொள்கை களாகிய பகுத்தறிவு, மனிதநேயம், சுயமரியாதை, சமூக சமத்துவம், பெண்ணுரிமை உள்ளிட்டவைகளை தொடர்ந்து பரப்பி வருகிறது.
_ இவ்வாறு ஆசிரியர் அவர்கள் உரையில் குறிப்பிட்டார்கள்.
விழாவில் எழுத்தாளர் மஞ்சை வசந்தன், பெரியார் நூலக வாசகர் வட்ட பொருளாளர் மனோகரன், கொடுங்கையூர் தங்கமணி, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், தாம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.தா.சண்முகசுந்தரம், திருவொற்றியூர் கணேசன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல்(தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி) உள்ளிட்ட திரளான தோழர்கள், தோழியர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
விழா முடிவில் வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் ஆ.வெங்க டேசன் நன்றி கூறினார்.
-விடுதலை29.10.15